4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்கு சென்றது ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய நாசா

கேப் கனாவெரெல்: நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. கடந்த 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான, ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா துவங்கியது. பல்வேறு காரணங்களால் தாமதமான சூழலில் தடைகளை கடந்து நேற்று ஆர்டெமிஸ்-2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது. இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது என்று நாசா தெரிவித்தது.
50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் பயணிக்கும் நாசாவின் முதல் நிலவுப் பயணமான ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் ஆகிய 3 வீரர்களும், கனடாவைச் சேர்ந்த ஜெரமி ஹான்சென் என்ற வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இதில், நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற பெருமையை கிறிஸ்டினா கோச் பெறுகிறார்.  இந்த பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓரியன் விண்கலம் முதல்நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *