2009-க்குப் பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்கத் தடை…இங்கிலாந்தில் சிறப்புமிக்க சட்டம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘புகையிலை மற்றும் வேப் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த எவரும், தங்களது வாழ்நாள் முழுவதும் சட்டப்பூர்வமாகச் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது. புகையிலையில்லா ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இங்கிலாந்து அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை தற்போது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம், சிகரெட் வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பு ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்த்தப்படும். அதன்படி, 2009-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு தற்போது 17 வயது அல்லது அதற்குக் குறைவாக இருக்கும். இவர்கள் இனி வரும் காலங்களில் எப்போதுமே சிகரெட் வாங்க முடியாத வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனையை ஒரேயடியாகத் தடை செய்யாமல், வருங்கால இளைஞர்களைப் புகையிலைப் பழக்கத்திலிருந்து நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் இந்த வயது வரம்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் சுமா பலர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். மேலும், இதனால் தேசிய சுகாதாரச் சேவைக்கு  பல பில்லியன் பவுண்டுகள் மருத்துவச் செலவாகிறது. இதனைத் தடுத்து, அடுத்த தலைமுறையினரை புற்றுநோய், இதய நோய் போன்ற கொடிய பாதிப்புகளிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமையாக ஒப்புதல் பெற்றுள்ளது. மன்னரின் முறையான ஒப்புதலுக்குப் பிறகு இது விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
சிகரெட் மட்டுமின்றி, சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் ‘வேப்’  பயன்பாட்டிற்கும் இந்தச் சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குழந்தைகளைக் கவரும் வகையிலான சுவைகள்  , பேக்கேஜிங் மற்றும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் மைதானங்களுக்கு அருகே புகைபிடிக்கவும், வேப் பயன்படுத்தவும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் இது குறித்துக் கூறுகையில்,  வருங்கால சந்ததியினரை போதை மற்றும் நோய்களில் இருந்து காப்பாற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. வருங்கால இங்கிலாந்து ஆரோக்கியமானதாக மாறும்  என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். உலகிற்கே முன்னோடியாக இங்கிலாந்து அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம் பல நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *