பாக்.கில் இருந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் புறப்பட்டார் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அறிவிப்பு

அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்காமலேயே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் இருந்து நேற்று புறப்பட்டார். அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் ஆலோசகர் ஜெரெட் குஷ்னர் இருவரும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று பாகிஸ்தானுக்கு புறப்படுவதாக தகவல்கள் வெளியாகின. நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஈரானே அமெரிக்காவை கேட்டுக் கொண்டதால், பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடப்பதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறினார்.
இதனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் இத்தகவலை திட்டவட்டமாக மறுத்தது. அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயாராக இல்லை என்றும், ஈரானின் கருத்துக்கள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதே போல, இஸ்லாமாபாத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிற அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார்.
இதன் பின்னர், அப்பாஸ் அராக்சி குழுவினர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பில், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான கோரிக்கைகளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி முன்வைத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை இணக்கமான பரிமாற்றமாக இருந்ததாக அவர் கூறி உள்ளார். அதே சமயம் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளை தொடர ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக ராணுவ தளபதி முனீர் கூறி உள்ளார். ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை நீடிக்கும் வரையிலும் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்பதில் ஈரான் மிக உறுதியாக உள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. இதற்கு அதிபர் டிரம்ப் ஏற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
* அமெரிக்க குழுவின் பாக். பயணம் ரத்து
ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி பாகிஸ்தானில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்தில் அமெரிக்க குழு பாகிஸ்தானுக்கு அனுப்பப்படாது என அதிபர் டிரம்ப் அறிவித்தார். பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அமரிக்க உயர்மட்ட தூதர்களிடம் கூறி உள்ளேன். ஈரான் விரும்பும் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம்’’ என கூறி உள்ளார்.
* மொசாட்டுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை
இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும், ஜனவரியில் நடந்த அரசு எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஈரான் நேற்று கியானி என்பவருக்கு மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியது.
* ஈரான் வர்த்தக விமான சேவை தொடக்கம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு மாதங்களுக்கு முன் போர் தொடங்கியதில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் ஈரான் பகுதியளவு வான்வெளியை திறந்திருந்தது. விமான சேவையை தொடங்கியது. இந்நிலையில் வர்த்தக விமான சேவையையும் ஈரான் தற்போது தொடங்கி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *