நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் பூமியில் இருந்து அதிக தொலைவு சென்று 4 விண்வெளி வீரர்கள் சாதனை

ஆர்டெமிஸ் 2 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு விண்வெளிப் பகுதியை அடைந்துள்ளனர். இந்த தூரம் பூமியிலிருந்து 252,756 மைல் (4 லட்சத்து 6771 கிமீ) என நாசா அறிவித்துள்ளது. மனிதர்கள் நிலவில் காலடி எடுத்து வைத்து 53 ஆண்டுகள் ஆனநிலையில் ‘ஆர்டெமிஸ் 2’ என்ற திட்டத்தின் மூலமாக கடந்த 2ம்தேதி, ஒரு கனடா நாட்டவர், ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பியது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு விண்வெளிப் பயணத்தின் ஆறாவது நாளில், ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 771 கிமீ தொலைவை எட்டியது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் 1970ம் ஆண்டில் அப்பல்லோ – 13 விண்கலத்தில் சென்ற வீரர்கள் பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணம் செய்ததே (4 லட்சத்து 171 கிமீ)மிக பெரிய சாதனையாகும். அந்த சாதனையை ஆர்டெமிஸ் – 2 விண்கல குழுவினர் முறியடித்துள்ளனர். அப்பல்லோ – 13 மேற்கொண்ட அதே பாதையில் விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
நிலவின் மறுபக்கம் விண்கலம் சென்றபோது, நாசா கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு 40 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் நிலவின் மேற்பரப்பில் மிக நெருக்கமாக விண்கலம் சென்றது. மனிதக் கண்கள் இதுவரை நேரில் பார்த்திராத நிலவின் பின்பகுதியை வீரர்கள் கண்டு ரசித்ததுடன், நிலவின் திசையில் இருந்து பூமி உதயமாவதை நேரில் கண்டு வியந்தனர். இந்த குழுவினர், நிலவை மிக நெருக்கமாக சுற்றி வந்து முக்கிய தகவல்களை சேகரித்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் பூமி நோக்கிய தங்கள் பயணத்தை ஆரம்பிப்பார்கள். சனிக்கிழமை பசிபிக் பெருங்கடலில் ஓரியன் விண்கலம் வந்திறங்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *