தலைநகர் மாலியில் துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு

மாலியில் தலைநகர் உட்பட பல நகரங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளும், கிளர்ச்சிப் படையினரும் இணைந்து ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மாலி தலைநகர் பமாகோ மற்றும் பல நகரங்களில் நேற்று ஒரே நேரத்தில் துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
இது குறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய தீவிரவாத குழுக்கள் தலைநகரில் சில இடங்களையும், ராணுவ முகாம்களையும் குறிவைத்துள்ளன. தாக்குதல் நடத்தியவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்’’ என கூறப்பட்டுள்ளது. பமாகோவில் மோடிபோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும் ஹெலிகாப்டர்கள் பறந்து செல்வதாகவும் சர்வதேச ஊடக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் அருகில் ராணுவத்தின் விமானப்படை தளமும் அமைந்துள்ளது. பமாகோ தவிர மற்ற பல நகரங்களிலும் இதே போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு நகரமான கிடாலியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நுழைந்து சில பகுதிகளை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் ராணுவத்துடன் தொடர்ந்து சண்டையிடுவதாகவும் அந்நகரின் முன்னாள் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார். காவோ நகரிலும் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அஸாவாட் விடுதலை முன்னணி எனும் கிளர்ச்சி அமைப்பு கூறும் நிலையில் அங்கும் ராணுவ முகாம் மற்றும் விமான நிலையத்திலிருந்து குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. இதற்கு முன் 2024ல் அல்கொய்தா ஆதரவு குழு பமாகோவின் விமான நிலையம், தலைநகரில் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றது. அதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் மாலியில் பணியாற்றிய 3 தமிழர்கள் உட்பட 5 இந்திய தொழிலாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *