ட்ரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு : “வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது

” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மன்னர் சார்ள்ஸ் கண்டனம்
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய  மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார்.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பங்கேற்பில் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, தனது உரையின்போது மன்னர் சார்ள்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மன்னர் சார்ள்ஸ் கூறுகையில்,
இந்த மாபெரும் கட்டடத்துக்கு அருகில் நடந்த சம்பவத்துக்கு பிறகு, அசைக்க முடியாத உறுதியுடன் நான் கூறுகிறேன். இது போன்ற வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.
நமக்கிடையே என்ன வேறுபாடுகள், என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் நமது மக்கள் அனைவரையும் தீங்கிலிருந்து பாதுகாப்பதற்கும் நமது நாடுகளின் சேவைக்காக தினமும் தங்கள் உயிரை பணயம் வைப்பவர்களின் தைரியத்துக்கு வணக்கம் செலுத்துவதற்குமான நமது உறுதிப்பாட்டில் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று தெரிவித்தார்.
மன்னர் தனது உரையைத் தொடங்குகையில், அமெரிக்காவின் 250வது சுதந்திர தின ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த உரையை ஆற்றுவதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
“அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் எங்களை வரவேற்ற அமெரிக்க மக்களுக்கு ராணியின் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது நாடுகளின் தலைவிதிகள் நீண்டகாலமாகப் பின்னிப் பிணைந்துள்ளன.
நாம் தற்போது, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரை சர்வதேச சமூகத்துக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடிய மோதல்கள் இடம்பெற்று வரும் ஒரு காலகட்டத்தில், ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தில் நாம் சந்திக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 400 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும், அமெரிக்க விவகாரங்களைக் கவனிக்கும் தனது வம்சத்தின் 19வது மன்னர் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது தாயாரான மறைந்த ராணி எலிசபெத்தைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரண்டாவது பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையை மன்னர் சார்ள்ஸ் பெற்றிருக்கிறார். அதையும் மன்னர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.
“1991-இல் இதே இடத்தில் உரையாற்றிய எனது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களை நான் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
பிரிட்டிஷ் மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்பையும் மரியாதையையும் வெளிப்படுத்த நான் இன்று இங்கு வந்துள்ளேன்.
நமது வரலாறு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. 1776இ-ன் உணர்வோடு பார்க்கும்போது, “பிரதிநிதித்துவம் இல்லாத வரி விதிப்பு கூடாது” (No taxation without representation) என்ற உங்கள் கொள்கை, ஒரு காலத்தில் நமக்கிடையிலான முரண்பாடாக இருந்தாலும், இன்று அது ஒரு பகிரப்பட்ட ஜனநாயக விழுமியமாக மாறியுள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் குறிப்பிட்டது போல, அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இந்த பிணைப்பு விலைமதிப்பற்றது மற்றும் உடைக்க முடியாதது.
இது நான் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் 20வது பயணம் மற்றும் மன்னராக மேற்கொள்ளும் முதல் பயணமாகும்…” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *