இருவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும், எம்.ஜி.ஆரையும் விஜய்யையும் ஒப்பிடுவது ஒரு மேலோட்டமான

ஒப்பீடுகள் கசப்பானவை என்றாலும், தேர்தல் காலங்களில் அவற்றைத் தவிர்க்க முடியாது. தற்போதைய அரசியல் நிலப்பரப்பை கடந்த காலத்தின் கண்ணாடியில் பார்த்துப் புரிந்துகொள்ளும் முயற்சியில் கட்சிகள், தலைவர்கள், அவர்களின் தேர்தல் அறிக்கைகள், செயல்திட்டங்கள், நலத்திட்டங்கள், சித்தாந்தங்கள் என அனைத்தும் விரிவாக அலசப்படுகின்றன.
 தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டசபைத்  தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு ஒப்பீடு எதுவென்றால், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய்யை, மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனுடன் (எம்.ஜி.ஆர்) ஒப்பிடுவது தான்.
இது உண்மையில்  ஒரு மேலோட்டமான ஒப்பீடு. இருவருமே நடிகர்களாக இருந்து வாய்ப்பு கிடைத்தபோது அரசியலில் குதித்தனர் என்ற ஒரே ஒரு உண்மையைத் தவிர, மற்ற அனைத்து ஒப்பீடுகளும் இங்கே முடிவுக்கு வருகின்றன. Politics
இது குறித்து எழுத்தாளரும், திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கே. ஹரிஹரன் விளக்குகையில், “தேர்தல் என்பது ‘முதல் நாள் முதல் காட்சி’ போன்ற நிகழ்வு அல்ல. தேர்தல் களத்தில் இறங்கத் திட்டமிடுபவர்கள் முதலில் கள நிலவரத்தைச் சோதித்துப் பார்ப்பது அவசியம். எம்.ஜி.ஆர் அதைச் செய்தார் — அவர் அண்ணா தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பே நீண்ட காலம் அவர்  அரசியலில் இருந்தார்,” என்கிறார்.
எம்.ஜி.ஆர் தனது கட்சியைத் தொடங்குவதற்கு முன்னர்  தி.மு.க. விலும் அரசியலிலும் பல ஆண்டுகளைக் கழித்தார். அவரது அரசியல் பிரவேசம் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டது; திராவிடப் பிரச்சார பாணியில் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடல், ஒடுக்கப்பட்டவர்களின் நாயகனாக அவரை உயர்த்தும் வகையிலான திரைப்படங்கள் என்று  அவர் திட்டமிட்டுச் செயல்பட்டார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டு என்பது அக்கட்சி  தேர்தலில் களம் காணத் தொடங்கிய மூன்றாவது முறையாகும். இந்த வெற்றிக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம், கட்சிப் பணிகளுக்காக கே. காமராஜர் முதல்வர் பதவியிலிருந்து விலகியது மற்றும் நடிகர் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்டதால் உருவான அனுதாப அலை ஆகியவை முக்கிய காரணிகளாக இருந்தன.
தி.மு.க. வின்  தலைமையைப் பொறுப்பேற்ற மு. கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பிறகு, 1972 ஆம் ஆண்டில்  எம்.ஜி.ஆர் பிரிந்து சென்று அண்ணா தி.மு.க. வை நிறுவினார். இது மாநிலத்தில் நீண்ட காலம் நீடித்த திராவிடக் கட்சிகளின் இருமுனைப் போட்டிக்கு வழிவகுத்தது.
1977 ஆம் ஆண்டில் அண்ணா தி.மு.க.  சந்தித்த முதல் தேர்தல் ஒரு பிரமாண்டமான வெற்றியாக அமைந்தது; இது மாநில மற்றும் தேசிய அளவிலான சிறந்த அரசியல் அறிமுகங்களில் ஒன்றாகும். தனது முதல் மாநில அளவிலான போட்டியிலேயே அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு. க.வைத் தோற்கடித்து, திராவிட அரசியல் நிலப்பரப்பில் அந்த கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்த வெற்றிதான் சில விமர்சகர்களை விஜய்யின் அரசியல் வருகையுடன் தவறாக ஒப்பிடத் தூண்டுகிறது.
“இருவருமே தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் என்பதைத் தாண்டி, எம்.ஜி.ஆருக்கும் விஜய்க்கும் இடையிலான மற்ற ஒப்பீடுகள் எடுபடாது,” என்கிறார் ஹரிஹரன்.
எம்.ஜி.ஆர் ஒரு மக்கள் தலைவருக்கான பிம்பத்தைக் கட்டமைக்கத் திரைப்படங்களைப் பயன்படுத்தினார். ஆனால் விஜய்யின் திரைப்பயணத்தில் அத்தகைய கட்டமைப்பு ஏதுமில்லை. அவர் பெரும்பாலும் தனித்தே இயங்குபவர்; அரசியல் நிகழ்வுகளிலோ அல்லது ஊடக நேர்காணல்களிலோ அரிதாகவே பங்கேற்பவர். ஒரு வகையில், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இரகசியமாகவும், தனிமைப்படுத்தப்பட்டும் வைத்திருப்பதன் மூலமே தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.
“தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சியைத் தொடங்கும் வரை விஜய்க்கு சமூக அடிமட்ட அளவில் நேரடித் தொடர்பு இல்லை. மக்களுடன் பணியாற்றிய அனுபவம் ஏதுமின்றி, பல தசாப்தங்களாக அடிமட்ட அனுபவம் கொண்ட கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை அவர் நிலைநிறுத்துகிறார்.”
ஆனால்,  நாம் ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால், விஜய்க்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி. ராமாராவிற்கும் (என்.டி.ஆர்) இடையே அதிக ஒற்றுமைகள் இருக்கலாம் என்று ஹரிஹரன் கூறுகிறார்.
ஆந்திரப் பெருமைப்  பிரச்சனை
இது குறித்து ‘தி  இந்து’ வின் ஆந்திரப் பிரதேசப் பிரிவின் முன்னாள் தலைவர் தாசு கேசவ ராவ் கூறுகையில், “என்.டி.ஆர் தன்னுடன் பயணம் செய்த சினிமா செய்தியாளர்களிடம் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பலமுறை தெரிவித்திருக்கிறார், ஆனால் யாரும் அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,” என்று  விளக்குகிறார்.Movies
ஒரு கதையின்படி, என்.டி. ஆர். ஆந்திர பிரதேச சட்ட மேலவையில் ஒரு இடத்தைப் பெற விரும்பினார், ஆனால் அப்போதைய முதலமைச்சர் அஞ்சய்யா அந்த யோசனையை ஏற்கவில்லை. பவனம் வெங்கட்ராம ரெட்டி முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்விற்கு அழைக்கப்பட்டபோது தான் என்.டி.ஆரின் அரசியல் இலட்சியங்கள் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் மார்ச் 1982-ல் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சிகளின் தோல்வியைப் பயன்படுத்தி, ஒன்பதே மாதங்களில் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார்.
அவர் ‘ஆந்திரப் பெருமிதம்’ என்ற விடயத்தைக் கையில் எடுத்தார்; தெலுங்கு பிராந்திய உணர்வை முன்னிறுத்தி வெற்றி பெற்றார்.
ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு சினிமா நட்சத்திரமான சிரஞ்சீவியும்  தான் போட்டியிட்ட முதல் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே கட்சியைத் தொடங்கினார். ஆகஸ்ட் 26, 2008 அன்று, நிலவும் அரசியல் அமைப்பிற்கு ஒரு ‘மக்களை மையமாகக் கொண்ட’ மாற்றை வழங்கும் நோக்கில் சிரஞ்சீவியால் பிரஜா ராஜ்யம் கட்சி ( தொடங்கப்பட்டது.Politics
திருப்பதியில் அந்தக் கட்சியின் தொடக்க விழாவில் ஒரு பிரம்மாண்டமான கூட்டம் கூடியது. இது எங்காவது கேட்டது போல் இருக்கிறதா? நீங்கள் இன்னும் கூடுதல் ஒற்றுமைகளைத் தேடினால், தர்மவரத்தில் நடந்த பிரஜா ராஜ்யம் கட்சியின் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருவர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். விஜய்க்கு இது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் கரூரில் நடந்த அரசியல் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்டது.
விஜய்யின் முன்னால் உள்ள பாதை, கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறியது போல ஒரு ‘மஞ்சள் கோட்டில் பிரியும் இரு சாலைகள்’ போன்றது. தனியாகப் பயணத்தைத் தொடங்குவது என்பது அவரது முடிவு; ஆனால் அவர் எந்தச் சாலையில் செல்வார் என்பது நேரடியாக அவர் கையில் இல்லாவிட்டாலும், அவர் எடுக்கும் நடவடிக்கைகளின் விளைவாக அவர் எந்தத் திசையில் தள்ளப்படுகிறாரோ அதைப் பொறுத்தே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *